தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள், பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு வீடுகள் கட்டும் திட்டம் மாவட்ட நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்டு, தனியார் அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை மாவட்டத்தில் 10 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு 11வது வீடாக திருவிசநல்லூரில் கட்டப்பட்டுள்ளது, திருவிடைமருதூர் தாலுக்கா, திருவிசநல்லூரில் வசித்து வருபவர்கள் அண்ணாதுரை, கௌரி, இவர்கள் இருவருமே போலியோவினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள். இவர்களால் தரையில் ஊர்ந்து தான் செல்ல முடியும், இருவரும் கடின உழைப்பாளிகள். இவர்களுக்கு அனுஷ்கா (5) என்ற மகள் அரசு பள்ளியில் முதலாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர்களுக்கு குடியிருக்க சொந்த இடமில்லை,திருவிசநல்லூர் கோவில் இடத்தில் குளத்து கரை ஓரமாக ஒரு சிறிய ஓலை குடிசையில் மிகவும் பழுதடைந்த நிலையில் வசித்து வந்தனர், கௌரி தென்னை ஓலையை விலைக்கு வாங்கி மற்றவர்களின் உதவியுடன் குளத்தில் ஊற வைத்து அதை எடுத்து கீற்று முடைந்து விற்பவர். மழை நேரங்களில் அரிசி மாவு தயார் செய்து விற்பனை செய்பவர், அண்ணாதுரை இருசக்கர வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டும் வேலை பார்ப்பவர்,தங்களுக்கு பல்வேறு குறைகள் இருந்தும், அதனை பொருட்படுத்தாமல் தன்னம்பிக்கையுடன் கடினமாக உழைத்து வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று பிழைப்பு நடத்தி வருபவர்கள். இவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் குடியிருக்க ஒரு சொந்த வீடு வேண்டுமென்று மனு கொடுத்ததின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அவர்களுடைய சொந்த ஊரிலேயே இலவச வீட்டுமனை பட்டா மற்றும் தமிழக முதலமைச்சரின் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கப்பட்டு, பசுமை வீடு திட்டம் மற்றும் மதர் தெரசா பவுண்டேஷன் சார்பில் மொத்தம் ரூ 6.20 இலட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டி முடிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வீட்டினை திறந்து வைத்து அவர்களிடம் ஒப்படைத்தார்,
இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா, மதர் தெரசா பவுண்டேஷன் சேர்மென் சவரிமுத்து, அறங்காவலர் கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.