தஞ்சையை அடுத்த அருண்மொழி தேவன்பேட்டை ஊரில் இராஜராஜ சோழன் காலத்து கல்வெட்டு காணப்பட்டது இதுகுறித்து தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப் பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான முனைவர் மணி.மாறன், தலைமையாசிரியர் தில்லை கோவிந்தராஜன், ஆசிரியர் ஜெயலெட்சுமி ஆகியோர் அங்கு சென்று கள ஆய்வு செய்தனர்,இதுகுறித்து முனைவர் மணி.மாறன் கூறும்போது சோழர் காலத்தில் தஞ்சாவூர் கூற்றத்தின் புறம்படியாகத் திகழ்ந்த அருண்மொழி தேவன் பேட்டை மாமன்னன் இராஜராஜனின் பெயரால் அமைந்த ஊராகத் திகழ்ந்துள்ளது.இங்கு சோழ மன்னர்களால் வெட்டப்பெற்ற மிகப்பெரும் ஏரி இன்றளவும் உள்ளது.இந்த ஏரி சமுத்திரம் ஏரி என்ற பெயரால் அழைக்கப்படுகிறது,இந்த ஏரியிலிருந்து பாசனத்திற்காக செல்லும் இரண்டு கால்வாய்கள் உள்ளன.அவை லோகமாதேவி வாய்க்கால் என்றும், அருண்மொழி தேவன் வாய்க்கால் என்றும் அழைக்கப்படுகிறது,இதில் ஒன்றான அருண்மொழிதேவன் வாய்க்கால் மதகு சீர்செய்யப்பட்ட பொழுது,அங்கிருந்து இக்கல்வெட்டு எடுக்கப்பெற்றது அதில் நிலக்கொடை பற்றிக் குறிப்பிட்டும் இக்கல்வெட்டில் வானவன் மூவேந்த வேளாண் என்ற அதிகாரியின் பெயர் காணப்படுகிறது.இவர் இராஜராஜன் காலத்தில் உயர் பொறுப்பில் இருந்த அதிகாரியாவார்.இவ்வூரில்கண்டெடுக்கப்பெற்ற கல்வெட்டு வாசகம் கரந்தை கல்வெட்டில் காணப்படும் வாசகங்களுடன் ஒத்துத் திகழ்கின்றது. இதைப் பார்க்கும்போது இவை இரண்டும் சமகாலத்தவையாக இருக்கலாம் எனக் கருத முடிகின்றது. மேலும், இவ்வூரில் இருந்து இடிந்துபோன சிவன்கோயிலின் உடைந்து போன பல பாகங்கள் பரவலாகக் காணப்படுகின்றது.அவ்வாறுசிதைந்துபோன சிற்பங்களில் ஒன்றான ஆலிங்கன சந்திரசேகர் மகர தோரணத்தில் அமைந்து அழகுடன் காட்சி தருகின்றார், இச்சிற்பம் சோழர் காலத்தைச் சேர்ந்தது ஆகும்,இக்கள ஆய்வின்போது அவ்வூரினைச் சேர்ந்த மோகன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், மணிகண்டன்,ராஜ் ஆகியோரும் உடனிருந்ததாக தெரிவித்தார்.