ஸ்ரீதியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனை இசை அஞ்சலி

1254

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் சத்குரு ஸ்ரீதியாகராஜர் 174வது ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடும் விழா சிறப்பாக நடைபெற்றது,இதில் நாடு முழுவதுமிருந்து வந்திருந்த இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி இசை அஞ்சலி செலுத்தினர்.சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு ஸ்ரீதியாகராஜர், அவர் மறைந்த பகுள பஞ்சமி திதியன்று தஞ்சை மாவட்டம் திருவையாறில் காவிரிக் கரையோரம் அமைந்துள்ள அவரது சமாதியில் ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனை விழா வெகு விமரிசையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டிற்கான தியாகராஜரின் 174வது ஆராதனை விழா திங்கள் அன்று 1ந்தேதி துவங்கி ஏராளமான இசைக் கலைஞர்கள் இசை நிகழ்ச்சி நடத்தினர், இரண்டாம் நாளாக ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பஞ்சரத்ன கீர்த்தனை இசை அஞ்சலி செவ்வாய் அன்று நடைபெற்றது, முன்னதாக திருவையாறு திருமஞ்சன வீதியில் தியாகராஜர் வாழ்ந்த வீட்டில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, அங்கிருந்து தியாகராஜர் திருஉருவ மேனியுடன் உஞ்சவிருத்தி பஜனையுடன் ஊர்வலம் புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக வந்து ஆராதனைப் பந்தலை வந்தடைந்தது. இதைத் தொடர்ந்து தியாகராஜரின் சமாதியில் எழுப்பப்பட்ட கோவிலில் உள்ள திருஉருவமேனிக்கு பால், சந்தனம், பன்னீர், மஞ்சள் போன்ற பல்வேறு வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது அப்போது புல்லாங்குழல் கலைஞர்கள் வாசிக்கும் கீர்த்தனையுடன் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த இசைக்கலைஞர்கள், வாத்தியக் கலைஞர்கள், இசை ரசிகர்கள் ஒரே குரலில் பஞ்சரத்ன கீர்த்தனைகளான நாட்டை, கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீ ராகங்களை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினார்கள்.இவ்விழாவில் பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன்,மகதி, ஒ.எஸ்.அருண், ரமணி உள்ளிட்டோர் பாடினர், இறுதியில் தியாகராஜருக்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

44 − = 35