தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் 174வது தியாகராஜர் ஆராதனை விழா துவக்கம்

1389

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் 174வது தியாகராஜர் ஆராதனை விழா மங்கள இசையுடன் துவங்கியது.
இவ்விழாவினை முன்னாள் அமைச்சரும் தியாக பிரம்ம அறக்கட்டளை தலைவருமான ஜி.கே.வாசன் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் ஆகியோர் தொடங்கி வைத்தனர் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு ஸ்ரீதியாகராஜர் திருவாரூரில் பிறந்து திருவையாறில் வாழ்ந்து திருவையாறு காவிரிக்கரையில் 1847 ஆண்டில் முக்தி அடைந்தவர். அனைத்தும் ராமபிரானே என வாழ்ந்த இவர் இயற்றிய தெலுங்கு கீர்த்தனைகள் கர்நாடக சங்கீத உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி கர்நாடக இசைப் பிரியர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது, எனவே கர்நாடக இசைப் பிரியர்களால் இவர் ஆராதிக்கப்பட்டார். இதன் பொருட்டு தியாகராஜரை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் திருவையாறில் அமைந்துள்ள அவரது சமாதி அருகே ஆராதனை விழா தியாக பிரும்ம மகோத்சவ சபையால் தொடர்ந்து வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது, அதன்படி இந்தாண்டு 174வது ஆண்டு ஆராதனை விழா திங்கள் (1.2.21) அன்று சிறப்பாக தொடங்கியது. முன்னதாக தியாகராஜர் ஆஸ்ரமத்தில் உள்ள அவரது திருஉருவமேனிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனைகள் செய்யப்பட்டன. சத்குரு ஸ்ரீதியாகராஜரின் சமாதி முன்பு நடைபெறும் இந்த ஆராதனை விழாவில் நாடெங்குமிருந்து வந்திருந்த கர்நாடக இசைப்பிரியர்கள் மற்றும் பிரபல கர்நாடக வித்வான்கள் கலந்துகொண்டு இசைக் கச்சேரியை நடத்துகின்றனர்.இந்த ஆராதனை விழா இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.துவக்கவிழா நிகழ்ச்சியில் ஷேக் மகபூப் சுபானி காலிஷா பீ மகபூப் பெரோஸ் பாபு குழுவினரின் நாதஸ்வரம் நிகழ்ச்சி நாங்கூர் செல்வகணபதி உடுமலைப்பேட்டை மணிகண்டன் தவில் இசை நிகழ்ச்சி ஆகியவை சிறப்பாக நடைபெற்றது, கொரனோ தொற்று நடவடிக்கையால் இரண்டு நாட்கள் மட்டுமே நடைபெறும் இவ்விழாவில் பிரபல கலைஞர்களின் வாய்பாட்டும்,பிரபல நாதஸ்வர கலைஞர்களும், பிரபல வீணை,வயலின், புல்லாங்குழல் இசைக் கலைஞர்களும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சியில் தியாகபிரம்ம மஹோத்ஸவ சபா செயலாளர் அரித்துவாரமங்கலம் பழனிவேல், செயலாளர் ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், பொருளாளர் கணேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.