தஞ்சாவூர் மாவட்டத்தில் 10ஆம் நூற்றாண்டு – சோழர்கால ஜேஷ்டா சிற்பம் கண்டெடுப்பு

1159

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அடஞ்சூரில் அருள்மிகு ஒப்பிலா அம்பிகை உடனுறை அனந்தீசுவரர் கோயில் திருச்சுற்று மதில் சுவரின் வெளிப்புறத்தில் கேட்பாரற்ற நிலையில் ஜேஷ்டாதேவியின் சிற்பம் காணப்பெற்றது இதுகுறித்து வரலாறு மற்றும் சுவடியியல் ஆய்வாளரும் சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப் பண்டிதருமான முனைவர் மணி.மாறன் கூறும்போது சோழர்கள் காலத்தில் மிகவும் சிறப்புடன் திகழ்ந்த ஆற்காட்டுக் கூற்றத்தைச் சார்ந்த ஊர்களில் ஒன்றான அடஞ்சூர் எனும் சிற்றூரில் சோழர் காலத்தைச் சார்ந்த ஒப்பிலா அம்பிகை உடனுறை அனந்தீசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது.இக்கோயிலின் வெளிப்புறத்தே கிழக்கு நோக்கியவாறு பாதி மண்ணில் புதையுண்ட நிலையில் ஜேஷ்டாதேவியின் புடைப்புச் சிற்பம் கண்டறியப்பட்டது.இச்சிற்பம் சுமார் 4 அடி உயரம் 3 அடி அகலத்தில் உள்ளது.ஜேஷ்டாதேவி இருபுறமும் அவளுடைய மகன் குளிகன் எனப்படும் மாந்தன், அவளுடைய மகள் மாந்தி ஆகியோர் புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளனர். அச்சிற்பத்தினுள் மேற்புறத்தில் காக்கை வடிவம், விளக்குமாறு போன்றவையும் வடிக்கப்பட்டுள்ளன.தமிழ்நாட்டில் பல பெண் தெய்வ வழிபாடுகள் உண்டு. திருமகள், நிலமகள், கொற்றவை, மாரியம்மாள், பச்சையம்மாள் போன்றவைகளுள் ஜேஷ்டாதேவி வழிபாடும் ஒன்றாக இருந்து வந்துள்ளது. காலப்போக்கில் பிற பெண்தெய்வ வழிபாடுகள் தொடர்ந்தாலும் ஜேஷ்டாதேவி வழிபாடு மட்டும் நின்றுபோய்விட்டது. சில இடங்களில் ஜேஷ்டாதேவியைக் கண்டவர்கள் அச்சிலையைக் கண்டால் மனிதர்களுக்கு ஆகாது என்ற முடிவுக்கு வந்து இச்சிலையினைக் குப்புறப் படுக்கவைத்து மண்ணால் மூடிமறைத்துவிட்டனர். திருமகளின் தமக்கையாகக் கருதப்படும் ஜேஷ்டாதேவியை தவ்வை, மாமுகடி, முகடி என்றெல்லாம் திருக்குறள் குறிப்பிடுகின்றது. கி.பி. 7ஆம் நூற்றாண்டு தொடங்கி 10ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்திலும், கர்நாடகத்திலும் புகழுடன் திகழ்ந்த தாய்க்கடவுள் ஜேஷ்டாதேவி ஆகும். பிற்காலத்தில் இத்தெய்வம் தன் சிறப்பினை இழந்துவிட்டது.திருப்பரங்குன்றம் குடைவரைக் கோயிலில் ஜேஷ்டாவிற்கென தனி கருவறை அமைந்துள்ளது. அதனைத் திறந்தால் நாட்டுக்குக் கேடு உண்டாகும் என்ற நம்பிக்கையால் திறக்கப்படுவதில்லை. இங்குள்ள ஜேஷ்டையின் உருவம் மிகத்தொன்மையான உருவம் எனலாம்.ஜேஷ்டாதேவி என்ற சொல்லுக்கு முதன்மை வணக்கம் பெறத்தக்கவள் என்ற பொருளுண்டு. எல்லோருக்கும் மூத்ததேவி, திருமகளுக்கு மட்டுமே மூத்ததேவி எனக் காட்டப்பட்டபோது,மூதேவியாகி வீழ்ச்சியடையத் தொடங்கினாள். இதனாலேயே இத்தேவியின் சிற்பங்கள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. அவ்வகையில் அடஞ்சூரில் கோயில் சுவருக்கு வெளியே கிடக்கும் சிற்பம் பாதுகாக்கப்பட்டால் பழந்தமிழகத்தின் வரலாறு பாதுகாக்கப்படும் என்று தெரிவித்தார்.