தஞ்சாவூரில் ஆதரவற்ற குழந்தைகளுடன் புத்தாண்டு கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்

1281

தஞ்சாவூரில் சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் அன்னை சத்யா குழந்தைகள் இல்லம் அரசினர் குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகின்றன. இதில் அன்னை சத்யா குழந்தைகள் இல்லத்தில் 21 ஆதரவற்ற பெண் குழந்தைகளும், அரசினர் குழந்தைகள் இல்லத்தில் 48 ஆதரவற்ற ஆண் குழந்தைகளும் உள்ளனர்.இதில் தங்கிக் கல்விப் பயின்று வரும் ஆதரவற்ற குழந்தைகளுடன் தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தனது குடும்பத்தினருடன் சென்று இனிப்புகள், பழங்கள் வழங்கிப் புத்தாண்டைக் கொண்டாடினார்.
அப்போது மாவட்ட ஆட்சியரிடம் பேசிய துர்கா என்ற குழந்தை தான் படித்து மருத்துவராவேன் என்றும், மற்றொரு குழந்தை ஓவியா, தான் நன்றாகப் படித்து ஐ.பி.எஸ் ஆவேன் என்றும் கூறியுள்ளனர்
இவர்களிடம் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் கூறுகையில் எவ்வளவு இடையூறுகள் வந்தாலும், நல்ல முறையில் படித்து உயர் பதவியை அடைய வேண்டும். உங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். என்றும் நீங்கள் படித்து நல்ல பதவிக்குச் சென்ற பின்னர், நான் எங்கே பணிபுரிந்தாலும் என்னைச் சந்தித்து தஞ்சாவூர் அன்னை சத்யா குழந்தைகள் இல்லத்தில் படித்தபோது நீங்கள் எங்களுக்கு அறிவுரை கூறினீர்கள். அதுபோன்றே படித்து நான் நல்ல பதவிக்கு வந்துள்ளேன் எனத் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார் அப்போது அன்னை சத்யா இல்லக் கண்காணிப்பாளர் விஜயா, அரசினர் குழந்தைகள் இல்லக் கண்காணிப்பாளர் சவுந்தரராஜன்,மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.