இப்ப இல்லைன்னா எப்பவும் இல்லை என
நடிகர் ரஜினிகாந்த் பேச்சு

1083

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்று பல ஆண்டுகளாக கேள்விக்குறி எழுந்த நிலையில் தனது நிலைப்பாட்டை நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார் தன்னுடைய உயிரே போனாலும் பரவாயில்லை. மக்களுக்காக உழைப்பேன். மாற்று அரசியல் வேண்டும், ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதற்காகத்தான் கட்டாயம் அரசியல் கட்சி தொடங்க உள்ளேன். ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவேன் என்று ரஜினி அறிவித்துள்ளார். மேலும் தமிழருவி மணியனைமேற்பார்வையாள ராகவும் ரஜினி நியமித்துள்ளார்.
சென்னை போயஸ் இல்லத்தில் ரஜினி அளித்த பேட்டியில்
‘சட்டப்பேரவைத் தேர்தல்வரும் போது, தேர்தலுக்கு முன்னால் கட்சி ஆரம்பிப்பேன். 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று சொல்லியிருந்தேன். அதற்குப் பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் மக்கள் மத்தியில் எழுச்சி வர வேண்டும். அந்த எழுச்சியை உண்டாக்க வேண்டும். எழுச்சி வந்தபிறகுதான் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தேன்.
அதற்காக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யலாம் என்று இருந்தேன். கொரோனா காரணமாக என்னால் செய்ய முடியவில்லை. எனக்கு உடல் நிலை சரியில்லாததால் கரோனா தொற்று நேரத்தில் மக்களிடம் சென்று பிரச்சாரம் செய்தால் அவர்களுக்குச் சேவை செய்வது மருத்துவ ரீதியாகக் கட்டாயம் ஆபத்து என்று மருத்துவர்கள் சொன்னார்கள். நான் பிரச்சாரம் செய்ய சிந்தித்ததற்குக் காரணம், நான் சிங்கப்பூரில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த போது தமிழ் மக்களின் பிரார்த்தனைதான் என்னைப் பிழைக்க வைத்தது.தற்போது அவர்களுக்காக என் உயிரே போனாலும் என்னைவிட சந்தோஷப்படுவது யாரும் இருக்க முடியாது. நான் கொடுத்த வாக்கை நான் என்றுமே மீற மாட்டேன். ஒரு அரசியல் மாற்றம் ரொம்பக் கட்டாயம். காலத்தின் தேவை ரொம்பமுக்கியம். மாற்ற வேண்டும். அனைத்தையும் மாற்ற வேண்டும். அரசியல் மாற்றம் வந்தே ஆக வேண்டும்.இப்ப இல்லைன்னா எப்பவும் இல்லை. அதை மக்கள்தான் முடிவு பண்ண வேண்டும். நான் வருவேன் அந்த மாற்றத்தை நீங்கள்தான் உருவாக்க வேண்டும்.நான் வெற்றி அடைந்தாலும் அது உங்களுடைய வெற்றி. தோல்வி அடைந்தாலும் அது மக்களின் தோல்வி.ஆகவே, கடினமாக வேலை செய்து என்னால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்து வெற்றியடைவேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு தலையெழுத்து இருப்பதுபோல் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தலையெழுத்து உண்டு. தமிழ்நாட்டின் தலை எழுத்தை மாற்றவேண்டிய நாள் வந்தாச்சு. நிச்சயம் அது நடக்கும். அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம். இப்ப இல்லைன்னா எப்பவும் இல்லை. மாற்றுவோம். எல்லாவற்றையும் மாற்றுவோம்”வரும் ஜனவரி மாதம் கட்சி தொடங்கப்படும் என்றும்
ரஜினி பேசியுள்ளார் இதனையடுத்து அரசியல்கட்சி அறிவிப்பு வெளியானதும் தஞ்சாவூரில் ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் ரஜினி கணேசன் தலைமையில் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்