தஞ்சை மாவட்டம் பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வாலிபால் மைதானம் அமைக்க தனக்கு கிடைத்த கஜா புயல் நிவாரண தொகையை வாரி வழங்கியுள்ளார் பாக்கியலட்சுமி, பேராவூரணி நாடாகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி இவருடைய கணவர் திருநீலகண்டன் இவர்களுக்கு சாம்பவி என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவரது கணவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு மின் விபத்தில் இறந்துவிட்டார்,பாக்கியலட்சுமி சில ஆண்டுகள் பேராவூரணியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். தனது கணவர் இறந்த பிறகு விவசாயத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு வீசிய கஜா புயலின் கோர தாண்டவத்தால் இவரது 1.5 ஏக்கர் தென்னந்தோப்பில் 75 சதவீத மரங்கள் சாய்ந்து முறிந்துவிட்டன. இதனால்; கடும் பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டு பாக்கியலட்சுமி தன்னம்பிக்கையோடு மீண்டும் உழைக்கத் தொடங்கினார். இந்த நிலையில் பேராவூரணி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வாலிபால் விளையாட்டு மைதானம் இல்லாமல் பல மாணவியர்கள் போட்டிகளில் பங்கேற்க சிரமப் படுவதாக பாக்கியலட்சுமி தெரிந்து கொண்டார். இந்நிலையில் பாக்கியலட்சுமிக்கு கஜா புயலில் விழுந்த தென்னை மரங்களுக்கு இழப்பீடாக அரசு நிவாரண நிதியாக ரூபாய் 1.50 லட்சம் கிடைத்தது, இந்த தொகையை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வாலிபால் மைதானம் அமைக்க கொடுத்து தானே முன்னின்று ஒவ்வொரு வேலைகளையும் செய்து கொடுத்துள்ளார்.இதனை அறிந்த அப்பகுதி மக்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து கொண்டனர்,அதேபோல் தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் பாக்கியலட்சுமியை நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.இதுகுறித்து பாக்கியலட்சுமி கூறும் போது பேராவூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு வருகிற மாணவியர்கள் பல்வேறு விளையாட்டு திறன்களை பள்ளியில் வெளிப்படுத்தி வருகிறார்கள். அவர்கள் திறமையை வெளிப்படுத்த சரியான விளையாட்டு மைதான தளம் இல்லாததால் மேற்கொண்டு தகுதிக்கு செல்ல முடியாமல் அவர்களது விளையாட்டுத் திறன் குறைந்து போய் விடுகிறது.இதனால் தனக்கு வந்த கஜாபுயல் நிவாரண நிதியை கொண்டு பள்ளி மைதானத்தில் மண்டிக்கிடந்த புல் புதர்களை அகற்றி சீர்படுத்தி சமதளம் ஆக்கி வாலிபால் தளத்தை சுற்றி இரும்பு வலைகளை கொண்டு கூண்டு அமைத்து விளையாடுவதற்கு ஏற்ற வகையில் தளம் தயார்படுத்தி உள்ளோம் இதனால் பல மாணவியர்கள் பயன்பெறுவார்கள் என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.